Saturday, June 11, 2011

தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் பாலு மகேந்திராவின் சீடர்கள்

பாலு மகேந்திரா, மூன்றாம் பிறை தந்த அற்புத படைப்பாளி, சினிமாவை உயிராய் நேசிக்கும் ஒரு மாபெரும் கலைஞன். ஒவ்வொரு படைப்பையும் ஒரு குழந்தை போல நினைத்து படைக்கும் உன்னத கலைஞன்.


பாலு மகேந்திரா, தன் சீடர்களை பயிற்றுவிக்கும் விதமே தனி. இவரிடம் உதவி இயக்குனராக சேரவேண்டும் எனில் முதலில் பாட்டி வடை சுட்ட கதையை உங்கள் பாணியில் அவருக்கு பிடித்தார் போல் திரைக்கதை அமைத்து உங்களை நிருபித்து காட்ட வேண்டுமாம்.

உதவி இயக்குனராக சேர்ந்த பிறகு உங்களை கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவின் சின்ன நுணுக்கங்களை எல்லாம் கற்றுவித்து அத்துறையில் தேர்ந்தவராக மாற்றுவது அவர் வேலை. தினமும் ஒரு சிறு கதையை உங்களிடம் கொடுத்து, அதை சுவாரசியமான திரைக்கதையாக மாற்றி எழதி வர செய்து பின் அதில் உள்ள சிறு குறைகளையும், சுட்டிக்காட்டி திருத்துவாராம்.


இப்படி சினிமாவை உயிர் மூச்சாக நேசிக்கும் ஒரு கலைஞனின் சீடர்கள் தமிழ் சினிமாவின் அடையாளங்களாக மாறி வருவது, தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம். எதார்த்தமான சினிமாவை நோக்கி தமிழ் சினிமா மெல்ல நகர்வதற்கு காரணம் பாலு மகேந்திரா அவர்களின் சீடர்கள்தான் என்பது அப்பட்டமான உண்மை.

"இயக்குனர் பாலா தொடங்கி, இன்று சீனு ராமசாமி" வரையில் தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகளை குவித்து இந்தியாவையே தமிழ் சினிமாவை திரும்பி  பார்க்க வைத்துள்ளனர்.


முதல் படமான "சேதுவிலேயே" தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறிப்போனார் பாலா. இந்த படம் வெளிவரும் முன்பு வரை தமிழ் சினிமாவில் கண்டுக்கொள்ளப்படாத நடிகராகவே இருந்த விக்ரம, சேது படத்திற்கு பிறகு நட்சத்திர அந்தஸ்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது. நந்தா படத்தில் நடித்த பிறகுதான் சூர்யா என்றொரு நல்ல  "கதாநாயகன்" கிடைத்தார்.  இதன் பின் பிதாமகன் படத்தில் விக்ரமுக்கு தேசிய விருதையும் வாங்கி கொடுத்தார். நான் கடவுள் படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு சாதாரண கதாநாயகனாகத்தான் இருந்தார். இந்த படத்திற்கு பிறகு பெரிதும் கவனிக்கபடுகிற கதாநயாகனாக மாறிப்போனார்.

2009  வருடம் நான் கடவுள் படத்திற்காக, 12  வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அகத்தியன் வரிசையில் பாலா சிறந்த இயக்குனர் விருதை பெற்றார். ஒரு கதா பத்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும், அதன் நடை உடை பாவனை அனைத்தையும் படம் எடுக்க கிளம்பும் முன் முழுவதும் தீர்மானித்து விடுவது பாலு மகேந்திராவின் வழக்கம். அதே முறையைத்தான் பாலாவும் பின்பற்றுகிறார். "மணிரத்தினம் முதல் ஷங்கர்" வரை அனைவருக்கும் பிடித்த இயக்குனர் வரிசையில் முதலில் இருப்பவர் பாலா மட்டுமே.

சினிமாவுக்கு எழுத்தாளர்களின் பங்கும் முக்கியம் என்று எடுத்துகொண்டதால் நான் கடவுள் படத்திற்கு "ஜெயமோகனையும்", தற்போது வெளிவர இருக்கும் "அவன் இவன்" படத்திற்கு S.ராமகிருஷ்ணனையும் வசனம் எழுத வைத்துள்ளார் பாலா.


"கற்றது தமிழ்" ராம் பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்த இன்னொரு இயக்குனர். முதல் படத்திலே தமிழ் சினிமாவின் அதிகம் பேசப்பட்ட இயக்குனர் . இதுதான் ராமின் முதல் படம் என்று அறியாதவர்களிடம் சொன்னால் நம்ப மாட்டார்கள்.

 தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு பொக்கிஷம் இயக்குனர் ராம். இப்போது தங்க மீன்கள் என்று, எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும்  படத்தை இயக்கிக்கொண்டு உள்ளார்.

தமிழை மட்டுமே பாடமாக எடுத்து படித்தவன்  நிலையை எதார்த்தமாக சொல்லி வியக்க வைத்த மனிதர். இதை விட எதார்த்தமாக ஒரு படம் எடுக்க முடியுமா என்பது கொஞ்சம் சந்தேகமே.  இந்த படத்தின் கதாநாயகன் ஜீவா தன் வாழ்வின் மறக்க முடியாத சிறந்த படம் என சொன்ன படம்.



புதுமுகமாக அறிமுகமான அஞ்சலி, சிறந்த புதுமுக நடிகைக்கான  பல விருதுகளை வாங்கி தந்த படம். சிறந்த கதை மற்றும் எழுத்துக்கான விருதையும் ராமுக்கு வாங்கி தந்த படம்.




பாலு மகேந்திரா ஒரு உரையாடலில் குறிப்பிடும் போது, இதுவரையில் நான் எந்த இயக்குனரிடமும் போய் நான் உங்கள் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டதில்லை, ஆனால் ராமின் ஒரு படத்திற்காவது நான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார் என்றால் ராமின் திறமை புரியும்.

ஒரு மோட்டார் சைக்கிளை வைத்து திரைக்கதை அமைத்து அதையும் சுவாரசியமும், வேகமும் குறையாமல் ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியுமா என்றால் முடியும். அப்படி ஒரு படத்தை இயக்கி மலைக்க வைத்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.

தனுஷ்க்கு தன் சினிமா வாழ்வில் ஒரு பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம்தான் "பொல்லாதவன்". நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவனின் வாழ்கையில் மோட்டார் சைக்கிள் வருவதற்கு முன்பும் வந்த பின்பும் ஏற்படும் மாற்றங்களை எந்த அடைப்புக்குள்ளும் மாட்டி கொள்ளாமல் எதார்த்தமாக காட்டிய படம்.

அடிப்படையில் லயோலா கல்லூரியின் விஸ்காம் மாணவரான வெற்றிமாறன், இயக்குனர் பாலு மகேந்தராவுடன் இணைந்து சன் டிவியில் ஒளிபரப்பான  "பாலு மகேந்த்ராவின் கதை நேரம்" என்ற நிகழ்ச்சிக்காக 59  சிறுகதைகளை படித்து அதற்கு திரைக்கதை மாதிரியை அமைத்துக்கொடுத்தவர்தான் வெற்றிமாறன். பாலு மகேந்தராவுடன் அது ஒரு கனாக்காலம் படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
இரண்டாவது படமாக வெற்றிமாறன் இயக்கிய படம்தான் ஆடுகளம். சேவல் சண்டையும், அந்த தொழிலை கற்றுகொடுக்கும் ஆசானுக்கும், மாணவனுக்கும் இடையில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுத்த படம்தான் இது.


இந்த வருடம் , ஆடுகளம் ஆறு தேசிய விருதுகளை அள்ளி வந்துள்ளது. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என முக்கியமான விருதுகளை பெற்று இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. பாலாவுக்கு பிறகு சிறந்த இயக்குனர் விருதை வாங்கும் மூன்றாவது தமிழனாக வெற்றிமாறன் வலம் வருகிறார்.

"தென்மேற்கு பருவக்காற்று " தலைப்பே சற்று கவித்துவமாக வைத்து குறைந்த பொருட்செலவில், ஒரே தேனியில் ஒரே பகுதியில் வாழும் இரு வேறுப்பட்ட மக்களின் வாழ்க்கையை படச்சுருளுக்குள் அடக்கிய இயக்குனர் "சீனு ராமசாமி ".

முதல் படம் கூடல் நகரில் சோபிக்க தவறினாலும் அடுத்த படமான தென் மேற்கு பருவக்காற்று படத்தில், புளுதிக்காட்டையும் அதில் பிழைப்பு நடத்தும் ஒரு பெண்ணையும் பற்றி இவ்வளவு சிறப்பாக பதிவு செய்தது சிறப்பு வாய்ந்தது.
பேர் சொல்லும் அளவுக்கு பெரிய நடிகர்களும் இல்லாமல், புதிய இசை அமைப்பாளரை வைத்து சிறப்பாக எடுத்த படம். பாடல்களை வைரமுத்து, மண்ணின் மணத்தோடு எழுதியது படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.




இந்த வருடம் தேசிய விருது பட்டியலில் சிறந்த பிராந்திய மொழி படமாகவும், சரண்யா பொன்வண்ணன் சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். பாலு மகேந்த்ராவின் சீடரான இவரும் தேசிய விருதுகள் வாங்கியோர் பட்டியலில் இணைந்துள்ளார்.

இயக்குனர்கள் மட்டுமின்றி பாடலாசிரியர்களும் பாலு மகேந்த்ராவிடம் பாடம் பயின்று பெரிய அளவில் பரிமளித்து வருகின்றனர். அவர்களில் கவிஞர் அறிவுமதியும், நா. முத்துக்குமாரும் அடக்கம்.

பாலு மகேந்த்ராவின் சீடர்கள் ஒன்று அவர்கள் விருதுகளை வாங்கி குவிக்கின்றனர் அல்லது தாங்கள் உருவாக்கிய கதாபாத்திரம் மூலம் தங்கள் படத்தில் நடித்த நடிகர்களுக்கு விருதுகளை வாங்கி தருகின்றனர். பாலு மகேன்றாவின் சீடர்களால் தமிழ் சினிமா இன்னும் புதுப்புது சாதனைகளை படைக்கட்டும்!!!!

5 comments:

  1. பாலுமகேந்திரா பற்றிய ஒரு அருமையான தொகுப்பு

    ReplyDelete
  2. // மதுரன் said...

    பாலுமகேந்திரா பற்றிய ஒரு அருமையான தொகுப்பு //


    நன்றி மதுரன் உங்கள் வரவுக்கும், என் பிறந்த நாளுக்கு வாழ்த்தியமைக்கும்!!!

    ReplyDelete
  3. dear,

    i agree with yr view abt balumahendra.
    but be aware that aadukalam is a copy,

    ReplyDelete
  4. // Senthil said...

    dear,

    i agree with yr view abt balumahendra.
    but be aware that aadukalam is a copy, //

    இந்த மேட்டர் எனக்கு தெரியல அண்ணே !!

    ReplyDelete